தேனி: பெரியகுளம் அருகே உள்ள சருத்துப்பட்டி கிழக்கு தெருவைச் சேர்ந்தவர்கள் ஞானசேகர் (வயது 24), மலர்நிகா (வயது 21) தம்பதி. இந்த தம்பதிக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்று ஒன்றரை வயதில் ஹர்ஷன் என்ற ஆண் குழந்தை உள்ளார்.
இந்நிலையில் ஓராண்டுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டு ஞானசேகர் மரணமடைந்துள்ளார். தாயுடன் வளர்ந்து வந்த ஹர்ஷனுக்கு நேற்று (நவ.17) மாலையில் மலர்நிகா ஜெல்லி மிட்டாய் வாங்கி கொடுத்துள்ளார். குழந்தை அதை விழுங்கிய போது குழந்தைக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஆட்டோவில் தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஹர்ஷனை சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளார்.
அங்கு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் குழந்தை ஹர்ஷனை பரிசோதித்த போது குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, ஜெல்லி மிட்டாய் சாப்பிட்டு ஒன்றரை வயது ஆண் குழந்தை இறந்தது குறித்து பெரியகுளம் தென்கரை காவல் துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மேலும், இறந்த ஒன்றரை வயதுக் குழந்தை ஹர்ஷனின் உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பின்பு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஜெல்லி மிட்டாய் சாப்பிட்டதில் உணவுக் குழாயில் சிக்கி குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்திருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஜெல்லி மிட்டாய் சாப்பிட்டு குழந்தை இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: குழந்தை இல்லை எனச் சென்ற பெண்ணை கொலை செய்த கோயில் பூசாரி.. சேலத்தில் பரபரப்பு!