கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த வாலாஞ்சேரி மண்டலக் கல்லூரியை சேர்ந்த சுமார் 40 மாணவர்கள் புத்தாண்டை கொண்டாடும் விதமாக சுற்றுலா செல்ல திட்டமிட்டு இடுக்கி மாவட்டத்திற்கு வந்தனர்.
இவர்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று விட்டு இரவு ராமக்கல் மெட்டிலிருந்து திரும்பினர். அப்போது அடிமாலி முனியாறு என்ற பகுதியிலுள்ள வளைவில் திரும்பும் போது, பேருந்து கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த பள்ளத்திலுள்ள கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்து இன்று (ஜன.1) அதிகாலை 1.15 மணியளவில் நடந்தது. மாணவர்களின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். வெளிச்சம் இல்லாததும் மற்றும் இறக்கமான பகுதி என்பதால் சுமார் ஓன்றரை மணிநேரம் போராட்டத்திற்கு பின் பேருந்திலிருந்து மாணவர்களை மீட்டனர்.
இதில் பேருந்தில் இருந்து 39 மாணவர்கள் மற்றும் டிரைவர், கிளினர் என 42 பேர் மீட்கப்பட்டு, அடிமாலி தாலுகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் காலையில் பேருந்தின் அடியில் சிக்கியிருந்த மில்ஹாஜ் (21) என்ற மாணவியின் சடலம் மீட்கப்பட்டது.
மேலும் காயமடைந்த ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால், அவரை மேல் சிகிச்சைக்காக கோட்டயம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். மற்றவர்கள் அடிமாலி தாலுகா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையும் படிங்க: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு