தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே உள்ள மஞ்சளர் அணைப் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவர் பெரியகுளம் தென்கரையிலிருந்து இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, அவருக்கு பின்புறம் வந்த கண்டெய்னர் லாரி மோதி விபத்துக்குள்ளானது.
இதில், தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே ராஜா உயிரிழந்தார். விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற கண்டெய்னர் லாரியை அங்கிருந்த பொதுமக்கள், காவல் துறையினர் காந்தி சிலை அருகே விரட்டிப்பிடித்தனர். எனினும் வாகனத்தை நிறுத்திவிட்டு லாரி ஓட்டுநர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
பின்னர் இறந்தவரின் உடலைக் கைப்பற்றிய காவல் துறையினர் உடற்கூறாய்விற்காக பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த பெரியகுளம் தென்கரை காவல் துறையினர், தப்பியோடிய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.