தேனி: அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தொடங்கிய எம்ஜிஆரின் மறைவிற்குப்பின், பொதுச் செயலாளர் என்ற பதவி உருவாக்கப்பட்டு, அதில் ஜெயலலிதா நியமிக்கப்பட்டார். பின்னர், ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர், அந்த பதவியை வேறு யாரும் வகிக்கக்கூடாது; அவர் மறைந்தாலும் அவர் ஒருவரே நிரந்தர பொதுச் செயலாளர், என்ற முழக்கங்களோடு ‘நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா’ என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
எனவே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகள் உருவாக்கப்பட்டன. இதில், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் பதவி வகித்து வந்தனர். இந்நிலையில், கடந்த 23 ஆம் தேதி நடக்க வேண்டிய பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னர் நடந்த கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், ஒற்றைத்தலைமை கோரிக்கை எழுந்தது.
ஒற்றைத்தலைமை சர்ச்சை: இதனை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெளிப்படையாக செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித்தார். இதன் பிறகு, ஒற்றைத்தலைமையை நிர்வகிப்பது யார் என்ற கேள்விகளுடன் அதிமுகவில் சலசலப்பு தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக, கடந்த ஜூன் 23 அன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், ஒற்றைத்தலைமை குறித்த பேச்சுக்கள் ஓங்கியதால் கூட்டத்தில் இருந்து ஓபிஎஸ் உள்பட அவரது ஆதரவாளர்கள் பாதியிலே வெளியேறினர்.
மேலும், அடுத்த பொதுக்குழு கூட்டம் ஜூலை 11 அன்று நடைபெறும் என அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் அறிவித்தார். தொடர்ந்து, ஜனாதிபதி வேட்பாளருக்கான மனு தாக்கலில் கலந்து கொள்ள ஓபிஎஸ், டெல்லி சென்றார். இதில், பிரதமர் மோடியுடன் தனிப்பட்ட முறையில் ஓபிஎஸ் சந்திப்பு நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியானது.
நீடிப்பாரா ஓபிஎஸ்? ஆனால், அந்த சந்திப்பு நடைபெறவில்லை. இதனால், இரண்டு நாளில் தமிழ்நாடு திரும்பிய ஓபிஎஸ், தனது சொந்த ஊருக்குச் சென்றார். மேலும் தேனி மாவட்டத்திலே ஓபிஎஸ் இருப்பார் எனவும், அடுத்த பொதுக்குழு கூட்டத்தில் ஓபிஎஸ் பங்கு பெற மாட்டார் எனவும் கூறப்பட்டது. இந்நிலையில் அதிமுக செயல் வீரர்கள் கூட்டம் குறித்த அறிவிப்பு, ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் கையெழுத்து இல்லாமல் வெளியானது.
இந்தக் கூட்டம் அதிமுக கழக விதிகளின்படி செல்லாது என்றும், அதில் எடுக்கும் முடிவுகள் கழகத்தை கட்டுப்படுத்தாது என்றும் ஓ.பன்னீர்செல்வம் இரவில் அறிக்கை வெளியிட்டார். இந்நிலையில், நேற்று மாலை தேனி பெரியகுளம் வந்த ஒ.பன்னீர்செல்வம், அவசரமாக இன்று (ஜூன் 27) காலை சென்னை புறப்பட்டு செல்கிறார். அதிமுகவில் அடுத்தடுத்து திருப்பங்கள் அரங்கேறி வருவதால், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நமது அம்மா நாளிதழில் ஓ.பி.எஸ் பெயர் நீக்கம்