தேனி: பெரியகுளம் அருகே தனியார் செவிலியர் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரி விடுதியில் தங்கி முதலாம் ஆண்டு படித்து வரும் செவிலி மாணவி இன்று (நவ.23) காலை விடுதியின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். தற்கொலை முயற்சி மேற்கொண்ட மாணவிக்கு கால் முறிவு ஏற்பட்டது.
இதனைத்தொடர்ந்து கல்லூரி நிர்வாகம் காயமடைந்த மாணவியை மீட்டு, அங்கிருந்த விடுதிப் பணியாளர்கள் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இது தொடர்பாக பெரியகுளம் வட்டாட்சியர் காஜா செரீப் மற்றும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், மாணவிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், கல்லூரியில் இருந்து வீட்டிற்குச் செல்ல அனுமதி கேட்ட நிலையில், கல்லூரி நிர்வாகம் மாணவியின் பெற்றோருக்குத் தகவல் கொடுத்துள்ளதாகத் தெரிகிறது. அதன்பேரில், மாணவியின் பெற்றோர், வரும் சனிக்கிழமை வந்து அழைத்துச்செல்வதாகக் கூறியதாக அறியப்படுகிறது.
இதனால் மனமுடைந்த மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்தது. மேலும் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட மாணவியிடம் பெரியகுளம் காவல் துறை துணை கண்காணிப்பாளர் கீதா, நேரில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
மாணவி மாடியிலிருந்து குதித்து தற்கொலை முயற்சி செய்ததைத்தொடர்ந்து வருவாய்த்துறையினர் மற்றும் காவல் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஒரே புடவையில் காதல் ஜோடி தூக்கிட்டுத் தற்கொலை!