தேனி அருகில் உள்ள தர்மாபுரியைச் சேர்ந்தவர் தங்கவேல். விவசாயியான இவர், “NITHRA VIVASAYAM (நித்ரா விவசாயம்)” என்ற மொபைல் செயலியினை பயன்படுத்தி தனது விவசாய பொருள்களை விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் வழக்கம்போல தனது பொருள்களை விற்பனை செய்வதற்காக இந்த செயலியில் பதிவேற்றம் செய்துள்ளார்.
அப்போது அவரை செயலி மூலமாக தொடர்பு கொண்ட நபர்கள், எள், உளுந்து, நிலக்கடலை ஆகியவற்றை மொத்தமாக வாங்கிக்கொள்வதாகவும், பொருள் வந்து சேர்ந்த பிறகு பணத்தை அனுப்பிவைப்பதாகவும் கூறியுள்ளனர். எனவே ரூ.97,000 மதிப்பிலான பொருள்களை தங்கவேல், லாரி மூலமாக கோயம்புத்தூருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இந்த பொருள்களைப் பெற்று கொண்ட முகம்மது மாலிக் என்பவர், பொருளுக்கான தொகையினை காசோலையாக தங்கவேலுக்கு அனுப்பி வைத்துள்ளார். இந்த காசோலையினை வங்கியில் செலுத்திய போது, வங்கியில் பணம் இல்லை எனக் கூறியுள்ளனர். உடனடியாக முகமது மாலிக்கினை தொடர்பு கொண்ட போது, அவரது செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்து வைக்கப்பட்டிருந்தது.
தான் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்பதை உணர்ந்த தங்கவேல், தேனி மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் இது தொடர்பாகப் புகார் அளித்துள்ளார். பின்னர் இதுகுறித்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில், கோயம்புத்தூர் குனியமுத்தூரைச் சேர்ந்த முகமது மாலிக் மற்றும் காஜா முகமது ஆகிய இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.

தொடர்ந்து இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இருவரும் இதே போல பல விவசாயிகளை ஏமாற்றி இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் இவர்களிடமிருந்து 15 மொபைல் போன்கள், 10-க்கும் மேற்பட்ட சிம் கார்டுகளை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: மின் கட்டண மெசேஜ்: அபேஸான அரசு அலுவலரின் ரூ.8.8 லட்சம் மீட்பு - சைபர் கிரைம் போலீசார் அதிரடி!