தேனி: நாடு முழுவதும் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா என்ற அமைப்பை மத்திய அரசு தடை செய்தது. பின்னர் இது தொடர்பாக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்பட நாட்டின் பல்வேறு இடங்களில் அதிரடியாக சோதனை நடைபெற்றது. இதில், பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தேசிய புலனாய்வு முகமை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், தொடர்ந்து அந்த அமைப்பில் தொடர்பில் இருந்ததாக தேனி மாவட்டம் கம்பம் நகரில் உள்ள கம்பம் மெட்டு காலனியில் வசிக்கும் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்டச் செயலாளர் சாதிக் அலி என்பவரது வீட்டில், இன்று (மே 9) காலை தேசிய புலனாய்வு முகமை காவல் ஆய்வாளர் பிரியா தலைமையிலான அதிகாரிகள் திடீரென சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில் கூடலூர் காவல் ஆய்வாளர் பிச்சை பாண்டி தலைமையிலான இருபதுக்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். தொடர்ந்து தேசிய புலனாய்வு துறையினர் நான்கு மணி நேரம் விசாரணை செய்தனர். இந்த விசாரணை முடிவடைந்த நிலையில், 3 செல்போன்கள் மற்றும் முக்கிய ஆவணங்களை கைப்பற்றிய காவல் துறையினர், எஸ்டிபிஐ கட்சியின் மாவட்டச் செயலாளர் சாதிக் அலியை தேசிய புலனாய்வுத் துறை அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அப்போது கம்பம் பகுதியைச் சேர்ந்த முஸ்லீம் இயக்கத்தினர், திடீரென தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகளின் வாகனத்தை முற்றுகையிட்டனர். மேலும், என்ஐஏ அதிகாரிகளுக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பினர். இதனால் சிறிது நேரத்திற்கு பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர், சம்பவ இடத்தில் இருந்த காவல் துறையினர், முற்றுகையில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்தனர். இதனையடுத்து, தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகளின் வாகனம் புறப்பட்டுச் சென்றது. மேலும், பிஎஃப்ஐ தொடர்பாக மாநிலத்தின் பல்வேறு இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் இன்று காலை முதல் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Breaking News: தமிழ்நாட்டில் பல இடங்களில் என்ஐஏ(NIA) சோதனை!