நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கை சிபிசிஐடி தீவிரமாக விசாரித்து வருகிறது. இந்த சூழலில் நேற்று கைது செய்யப்பட்ட ஆறு பேரில், தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மாணவர் பிரவீனும் அவரது தந்தை சரவணனும் 15 நாள் நீதிமன்ற காவலுக்காக நேற்று தேனி சிறையில் அடைக்கப்பட்டனர். இன்று ராகுல் அவரது தந்தை டேவிஸ், அபிராமி அவரது தந்தை மாதவன் ஆகியோர் சிறைக்கு செல்கிறார்கள். தேனி சமதர்மபுரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் நேற்று இந்த ஆறு நபர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
அதைத் தொடர்ந்து அந்த மூன்று மாணவர்களும் படித்த கல்லூரியின் முதல்வர்கள் நேரில் ஆஜராக சிபிசிஐடியால் சம்மன் அனுப்பப்பட்டது. இதனடிப்படையில் பிரவீன் படித்த எஸ்ஆர்எம் கல்லூரியின் முதல்வர் சுந்தரம், ராகுல் படித்த பாலாஜி மருத்துவக் கல்லூரி முதல்வர் சாய்குமார் ஆகியோர் ஆஜராகி மாணவர்களின் ஆவணங்களையும் சமர்ப்பித்தனர்.
தற்போது அபிராமி படித்த சத்யசாய் மருத்துவ கல்லூரியின் முதல்வர் பிரேம்நாத் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். இவருக்கு முன்னதாக அக்கல்லூரியின் கண்காணிப்பாளர் சுகுமாரன் அண்ணாமலை சிபிசிஐடியினரிடம் ஆஜராகி விளக்கம் அளித்திருந்தார். இந்த விசாரணை தொடர்ந்து கொண்டிருக்கும் சூழலில் இவை அனைத்திலும் தொடர்புடைய இடைத்தரகர்களை தேடும் பணியும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்க:
நீட் தேர்வு ஆள்மாறாட்டம்: சிபிசிஐடி விசாரணையில் மாணவர் பிரவீன் உடல்நிலை பாதிப்பு