நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக உதித்சூர்யா, பிரவீன், ராகுல் என மூன்று மாணவர்களும் அவர்களது தந்தையர்களும் இதுவரை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதேபோல் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட வாணியம்பாடியைச் சேர்ந்த மற்றொரு மாணவனின் தந்தை முகமது சபியையும் சிபிசிஐடி போலீசார் கைது செய்து கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மாணவன் இர்ஃபான் படித்த தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் சீனிவாச ராஜூவுக்கு சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு ஆஜராகுமாறு நேற்று சம்மன் அனுப்பியுள்ளனர். அதன் அடிப்படையில் கல்லூரி முதல்வர் தேனி சமதர்மபுரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு வந்தார்.
இதில் மாணவர் இர்ஃபான் கல்லூரி நிர்வாகத்திடம் அளித்த நீட் ஸ்கோர் கார்டு, மற்றும் இதர சான்றிதழ்கள் அனைத்தையும் சிபிசிஐடி அலுவலர்களிடம் சமர்ப்பித்தார். காலை 11 மணிக்குத் தொடங்கிய விசாரணை சுமார் 4 மணி நேரமாக தொடர்ந்து நடைபெற்றது. விசாரணையில் மாணவர் இர்ஃபான் ஆள்மாறாட்டம் செய்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிபிசிஐடி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இதையடுத்து தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் நான்கு மணி நேரம் நடைபெற்ற விசாரணை நிறைவடைந்தது.
இதையும் படிங்க: நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு: மருத்துவக் கல்லூரி முதல்வர் நேரில் ஆஜர்!