நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து கைது செய்யப்பட்ட மாணவர் உதித்சூர்யாவிடம் சிபிசிஐடி காவல் துறையினர் நடத்திய விசாரணையில் மேலும் நான்கு மாணவர்கள் மோசடி செய்தது தெரியவந்தது. இதனையடுத்து சென்னையில் உள்ள மூன்று தனியார் மருத்துவக்கல்லூரிகளில் படித்து வந்த ஒரு மாணவி உள்ளிட்ட மூன்று பேரிடம் சிபிசிஐடி காவல் துறையினர் தேனியில் விசாரணை நடத்தினர். அவர்களோடு அவர்களின் கல்லூரி முதல்வர்களும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இதில் சென்னை பாலாஜி மருத்துவக்கல்லூரி மாணவர் பிரவின், எஸ்ஆர்எம் கல்லூரி மாணவர் ராகுல் ஆகிய இருவர் ஆள்மாறாட்டம் செய்தது முதற்கட்டமாக உறுதியானதையடுத்து இரு மாணவர்கள் மற்றும் அவர்களது தந்தை சரவணன், டேவிஸ் ஆகிய நால்வரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். சத்யசாய் மருத்துவக் கல்லூரி மாணவி அபிராமி விடுவிக்கப்பட்டார்.
இதனைத்தொடர்ந்து தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரியில் படித்து வந்த மாணவர் இர்பான் என்பவர் மீதும் ஆள்மாறாட்ட குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், ஆள்மாறாட்டம் தொடர்பாக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபசிஐடி நேற்று சம்மன் அனுப்பியது. அதன்படி தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் சீனிவாசராஜ் தற்போது தேனியில் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். தேனி சமதர்மபுரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜராகி உரிய ஆவணங்களுடன் அவர் விளக்கம் அளித்துவருகின்றார்.