மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேயுள்ள பேரையூரைச் சேர்ந்தவர் நொண்டி மகாலிங்கம். இவர், 2007ஆம் ஆண்டு தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள முருகமலை வனப்பகுதி, வருஷநாடு வனப்பகுதிகளில் ஏராளமான ஆயுதங்களை பதுக்கி வைத்து இளைஞர்களுக்கு நக்சல் ஆயுதப் பயிற்சி அளித்து வந்துள்ளார்.
காவல்துறையினர் நக்சலைட் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது வருசநாடு வனப்பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு நொண்டி மகாலிங்கம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து 2011ஆம் ஆண்டு பிணையில் வெளியே வந்த நொண்டி மகாலிங்கம், தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாகியிருந்தார்.
இந்நிலையில், பல்வேறு இடங்களில் தேடப்பட்டு வந்த இவர், 2016ஆம் ஆண்டு கேரளாவில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், பெரியகுளம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக இன்று அழைத்து வரப்பட்டார்.
அங்கு நீதிபதி விடுமுறை என்பதால் தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கீதா, இவ்வழக்கை டிசம்பர் 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதன் பின்னர், நக்சலைட் நொண்டி மகாலிங்கம் பலத்த காவல்துறை பாதுகாப்புடன் மதுரை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இதையும் படிங்க: சர்ச்சை கிளப்பும் வகையில் பஞ்ச் அடித்த செல்லூர் ராஜூ! காணொலி உள்ளே...