தேனி: தமிழக - கேரளா எல்லை பகுதியான தேனியில் இருந்து நாள்தோறும் ஏராளமான பெண் தொழிலாளர்கள் கேரளாவில் உள்ள தேயிலை மற்றும் ஏலக்காய் தோட்டங்களுக்கு பணிக்கு சென்று வருவது வழக்கம். இந்நிலையில் நேற்று மாலை கம்பம் மெட்டு அருகே உள்ள கல்லறைகள் எஸ்டேட் பகுதியில் ஏலத் தோட்ட பணிக்கு சென்று பணியாளர்கள் தங்களது வாகனத்தில் வீடு திரும்பி வந்து கொண்டிருந்தபோது, நெடுஞ்சாலையில் மது போதையில் வந்த சில நபர்கள் வாகனத்தை வழிமறித்து ஜீப் டிரைவர் சதீஷ்குமாரிடம் தகாத வார்த்தைகளை கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் வாக்குவாதம் முற்றியதை தொடர்ந்து டிரைவரை சாலையில் வைத்து தாக்கிய மதுபோதையில் இருந்தவர்களிடம் தட்டி கேட்ட பெண்களையும் தரக்குறைவாக பேசி தாக்கியுள்ளனர். இந்த சம்பவத்தைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அவர்களை தடுத்து நிறுத்த முயற்சித்தும் தொடர் தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும் இந்த சம்பவத்தை படம் பிடித்த ஒரு சிலர் அதனை தங்களது முகநூல் மற்றும் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது செல்லும்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!
இந்த தாக்குதல் சம்பவத்தை அறிந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டில் இருந்து கேரளாவிற்கு பணிக்குச் செல்லும் பெண் தொழிலாளர்களை தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாக குற்றம் சாட்டியதுடன், இந்த சம்பவம் குறித்து தமிழக - கேரளா மாநில காவல்துறையினர் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் தெரிவித்துள்ளனர்.
மேலும், மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக பல்வேறு போராட்டங்களை நடத்த இருப்பதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பாதிக்கப்பட்ட தோட்டத் தொழிலாளி பெண் கூறுகையில், "வழியில் நின்ற வண்டியை எடுக்கச் சொல்லியதற்கு வயசு பெண்களை எல்லாம் கையைப் பிடித்து, சீலையைப் பிடித்து இழுத்தன. ஜீப் ஓட்டி வந்த நபரை தாக்கியதில் பயங்கரம் காயம் ஏற்பட்டது. மேலும் மலையாளத்தில் புரியாத பல தகாத வார்த்தைகளால் திட்டி, எங்களை காயப்படுத்தி, அவமானப்படுத்தி, கேவலப்படுத்தினர். இதுவரை நாங்கள் கேரளாவில் இது போன்று ஒன்றை பார்க்கவில்லை. வேலைக்கு வருகின்றோம் சம்பளம் வாங்குகிறோம்" என கதறினார்.
இதையும் படிங்க: "தி எலிபண்ட் விஸ்பரர்ஸ் படத்தால் நிம்மதி இழந்தோம்" - பொம்மன், பெள்ளி குற்றச்சாட்டு!