தமிழ்நாடு – கேரள எல்லையில் அமைந்துள்ளது தேனி மாவட்டம். தென்மேற்குப் பருவமழை கேரளாவில் ஜூன் மாதம் முதல் தொடங்கி தற்போது தீவிரமடைந்து வருகின்றது.
இதன் காரணமாக கேரள எல்லையில் அமைந்துள்ள லோயர் கேம்ப், கூடலூர், கம்பம், அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் கடந்த சில வாரங்களாகவே குளிர்ந்த காற்றும், அவ்வப்போது மிதமான மழையும் பெய்து வருகிறது.
இந்த சீதோஷ்ண நிலை மாற்றத்தால் அப்பகுதி மக்கள் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த காய்ச்சலால் பாதிப்படைந்தவர்கள் கடுமையான உடல் வலி, மூக்கில் நீர் வடிதல், தொண்டை வலி உள்ளிட்ட தொந்தரவுகள் இருப்பதால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.
இதனிடையே கரோனா நோய்த்தொற்று எதிரொலியால் கம்பம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் சிகிச்சை பெற முடியாமல் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.
தற்போது சிகிச்சை பெற வேண்டுமானால் அரசு மருத்துவமனைக்கு மட்டுமே செல்ல முடியும். அரசு மருத்துவமனைக்குச் சென்றால் கரோனா நோய்த் தொற்று பரிசோதனை செய்வார்கள் என்ற அச்சத்தில் மக்கள் தனியார் மருந்தகங்களில் மாத்திரைகளை வாங்கி உட்கொண்டு வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.
தற்போது பரவிவரும் காய்ச்சல் சாதாரண காய்ச்சலா? அல்லது கரோனா நோய்த்தொற்றா என்ற அச்சத்தில் பொதுமக்கள் குழம்பிப்போய் உள்ளனர். இதன் காரணமாக கம்பம் பகுதியில் தொடர்ந்து ஒவ்வொரு தெருவாக மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என, பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.
இதனையடுத்து இன்று ( ஜூலை 7) கம்பம் நகராட்சி சுகாதார பிரிவு சார்பாக 70-க்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்கள் பத்துக்கும் மேற்பட்ட குழுக்களாக பிரிந்து தெருக்கள் வாரியாக சென்று காய்ச்சல், சளி போன்றவற்றால் பொதுமக்கள் பாதித்துள்ளார்களா? என பரிசோதனை செய்து வருகின்றனர்.
இந்த பரிசோதனையின் போது வெப்பம் சோதனை செய்யக்கூடிய கருவியை கொண்டு பொது மக்களுக்கு காய்ச்சல், சளி உள்ளனவா எனவும் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சளி காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனை அல்லது ஆரம்ப சுகாதார நிலையத்திற்குச் சென்று மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும், தாங்களாக மருந்துகளை உட்கொள்ளக்கூடாது என்றும் சுகாதார பணியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
தொடர்ந்து பொதுமக்களை சூடான உணவுகளை சாப்பிட வேண்டும், பழம், காய்கறிகளை உணவில் சேர்க்க வேண்டும், மது, புகையிலை பழக்கத்தை கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும் பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும், தகுந்த இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தவறாமல் மேற்கொள்ளுமாறு நகராட்சி சார்பாக, பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.