தேனி மாவட்டம் கம்பம் பகுதியைச் சேர்ந்தவர் காளிமுத்து. சுமை தூக்கும் தொழிலாளியான இவருக்கும் அதே பகுதியில் 10 ஆண்டுகளாகப் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த நாகர்கோவிலைச் சேர்ந்த அந்தோணி என்பவருக்கும் 2019, மார்ச் 3ஆம் தேதி தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து பிச்சைக்காரரான அந்தோணி, அவருடன் சேர்ந்து அதே பகுதியில் பிச்சை எடுத்து வரும் மதுரையைச் சேர்ந்த வாலிபர் சித்திக் என்பவருடன் தொழிலாளி காளிமுத்துவைக் கம்பம் சாலையில் தாக்கி கீழே தள்ளியுள்ளார். இதில் அவர் மீது அவ்வழியாகச் சென்ற அரசு பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலே பலியானார்.
சிவகாசி இரட்டை கொலை வழக்கு: கொலையாளிகள் கைது!
இச்சம்பவம் குறித்து கம்பம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, இரண்டு பிச்சைக்காரர்களையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். இதுகுறித்த வழக்கு தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள, மாவட்ட கூடுதல் அமர்வு நீதி மன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கு விசாரணை முடிவுற்ற நிலையில், இன்று அந்தோணி, சித்திக் ஆகிய இரண்டு பிச்சைக்காரர்களுக்கும் 10 வருடம் சிறைத் தண்டனையும், ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும், அபராத தொகையை கட்டத்தவறினால் மேலும் ஆறு மாதம் சிறைத் தண்டனையும் விதித்துத் தீர்ப்பளித்தார். இதனைத் தொடர்ந்து இருவரையும் காவல்துறையினர் பாதுகாப்புடன் மதுரை மத்தியச் சிறைக்கு அழைத்துச்சென்றனர்.