கேரள மாநிலம் தேக்கடியில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணை, தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களுக்கு நீராதாரமாக விளங்குகின்றது. உச்ச நீதிமன்றம் 2014ஆம் ஆண்டு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த உத்தரவிட்டு, அணையை கண்காணித்து பராமரிக்க மூவர் அடங்கிய குழுவையும் நியமித்தது.
இந்தக் குழுவிற்கு உதவியாக ஐந்து பேர் கொண்ட துணை கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டு, அதன் தலைவராக தற்போது மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் சரவணக்குமார் உள்ளார். இந்தக் குழுவில் தமிழ்நாடு அரசு சார்பில் பெரியாறு சிறப்பு கோட்ட செயற்பொறியாளர் சுப்பிரமணி, உதவி செயற்பொறியாளர் சாம் இர்வின், கேரள அரசின் சார்பில் அம்மாநில நீர்ப்பாசனத்துறை செயற்பொறியாளர் கிரிஜாபாய், உதவிப் பொறியாளர் பிரசீத் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
2019 பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி, அணையின் நீர்மட்டம் 115 அடியாக இருந்தபோது ஆய்வு செய்யப்பட்டது. இதையடுத்து தற்போது துணை கண்காணிப்புக் குழுவின் தலைவர் சரவணக்குமார் தலைமையில், அணையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முன்னதாக, இன்று காலை தேக்கடியில் உள்ள படகுத்துறை வழியாக அணைப்பகுதிக்குச் சென்று, மெயின் அணை, பேபி அணை, கேலரிப்பகுதி, மதகுப்பகுதி - மழையின் அளவு, அணையின் நீர்வரத்து, நீர் வெளியேற்றம், சீப்பேஜ் வாட்டர்(கழிவுநீர்) குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, மாலை குமுளியிலுள்ள பெரியாறு அணை கண்காணிப்புக் குழு அலுவலகத்தில் துணைக் குழுவினரின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. பின்னர், ஆய்வறிக்கையை, மூவர் குழுவிற்கு அனுப்பவுள்ளனர்.