கேரள மாநிலத்தில் கடந்த சில தினங்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. தமிழ்நாடு – கேரள எல்லையில் அமைந்துள்ள இடுக்கி மாவட்டத்தில் மூணாறு, தேக்கடி, குமுளி உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தென் தமிழ்நாட்டின் முக்கிய நீராதராமாகத் திகழும் முல்லைப்பெரியாறு அணைக்கு தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளது. தேக்கடி, வண்டிப்பெரியார், ஆனவச்சால் உள்ளிட்ட முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று பெய்த கனமழையால் 496 கனஅடியாக இருந்த நீர்வரத்து ஒரே நாளில் 1,428 கன அடியாக அதிகரித்துள்ளது.
இதனால் அணையின் நீர்மட்டமும் 114 அடியாக உயர்ந்துள்ளதால், தமிழ்நாடு பகுதிகளுக்கு குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து 300 கன அடி நீர் திறந்து விடப்பட்டது. இந்நிலையில், இன்று காலை நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து 496 கன அடியில் இருந்து 1428 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் கம்பம், தேனி மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.