தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக விடாது மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் பெய்த கனமழையினால் முக்கிய நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில், தென்தமிழகத்தின் முக்கிய நீராதாரமாகத் திகழும் முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு உள்பட ஐந்து மாவட்ட பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீரால் 120 அடிக்கு கீழ் சரியத் தொடங்கிய முல்லைப் பெரியாறு அணை நீரின் அளவு கிடுகிடுவென உயர்ந்து தற்போது 130 அடியை எட்டியுள்ளது. அணையின் மொத்த நீர்த்தேக்க அளவான 142 அடியில் இன்று (ஜன.17) காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 130.65 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 4ஆயிரத்து 849 மி.கன அடியாக இருக்கிறது.
விநாடிக்கு 2 ஆயிரத்து 483 கனஅடி நீர் வரத்துள்ள நிலையில் அணையிலிருந்து தமிழ்நாடு பகுதிக்கு 100 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. தேக்கடியில் 10.2மி.மீ, பெரியாறு அணையில் 2.8மி.மீ அளவும் மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. தொடர்ந்து பெய்துவரும் மழையால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் மேலும் உயரக்கூடும் என்பதால் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதி விவசாயிகள் இரண்டாம் போக சாகுபடிக்கு ஆயத்தமாக உள்ளனர்.
மேலும், இந்தாண்டு தொடக்கத்திலேயே முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் அதிகரித்து காணப்படுவதால் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்ட பொதுமக்கள், விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: வைகை அணையில் இருந்து 58ஆம் கால்வாய்க்கு தண்ணீர் திறந்து வைத்தார் ஓபிஎஸ்!