கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து வருவதால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழையின் அளவு அதிகரித்துள்ளது. குறிப்பாக தேக்கடியில் 235 மி.மீ. மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.
தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் நேற்று காலையில் 116 அடியாக இருந்த முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் இன்று காலையில் 124.20 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வரும் நீர்வரத்து 16 ஆயிரத்து 321 கனஅடியாகவும் நீர் இருப்பு 3,262 மி.கனஅடியாகவும் உள்ளது. மேலும், 110 கனஅடி தண்ணீர் தமிழ்நாட்டுக்கு திறக்கப்படுகிறது.
இதனால் முல்லைப் பெரியாறு கரையோரப் பகுதிகளுக்கு மக்கள் யாரும் செல்ல வேண்டாம் என தேனி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. முல்லைப் பெரியாறு பாசன விவசாயிகள் சென்ற மாதம்வரை நெல் சாகுபடி செய்ய முடியாமல் தவித்தனர். தற்போது அணையின் நீர்மட்டம் அதிகரித்துவருவதைக் கண்டு விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.