தேனி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களின் முக்கிய நீர் ஆதாரமாக முல்லைப்பெரியாறு அணை திகழ்கிறது. கோடை கால தொடக்கத்தில் இருந்தே அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் போதிய அளவு மழை இல்லாததால் நீர்மட்டம் படிப்படியாக குறைந்தது. இதனையடுத்து கேரளாவில் கடந்த ஜூன் மாதம் பெய்த தென்மேற்குப் பருவமழையும் எதிர்பார்த்த அளவில் இல்லாததால் தொடர்ந்து நீர்மட்டம் உயராமலேயே இருந்தது.
இதனால் முதல்போக சாகுபடியைத் தொடங்குவதில் விவசாயிகள் தயக்கம் காட்டி வந்தனர். இந்நிலையில் வளிமண்டல காற்றழுத்த தாழ்வு காரணமாக கேரளாவில் இடுக்கி, பத்தனம்திட்டா, கோழிக்கோடு உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் கன மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுத்துள்ளது.
முல்லை பெரியாறு திட்டத்தை செயல்படுத்துவோம்: திமுக வேட்பாளர் மகாராஜன் உறுதி!
இதன் எதிரொலியாக நேற்று(ஆகஸ்ட் 3) முல்லைப்பெரியாறு அணைப்பகுதியில் 124.2 மி.மீ அளவிலான மழையும் தேக்கடியில் 67.2 மி.மீ அளவிலான மழையும் பெய்தது. இதனால் அணைக்கு நீர்வரத்து 4,784 கன அடியாக அதிகரித்து இன்று(ஆகஸ்ட் 4) ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்து, 117.90அடியாக உள்ளது. தற்போது அணையின் நீர் இருப்பு 2,249 மி.கன அடியாகவும், விநாடிக்கு 600 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.
தொடர்ந்து நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கன மழையால் அணையின் நீர்மட்டம் மேலும் உயரக்கூடும் என்பதால், தேனி மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே சமயம் நீர் திறப்பு அளவைக் குறைத்து, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, நீர்மட்டம் உயர்ந்த பிறகு நீர் திறப்பை அதிகரிக்க வேண்டும் என்று கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இதையும் படிங்க: முல்லைப் பெரியாறு அணை: திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் செய்த ஒப்பந்தத்தின் வயது 134!