தஞ்சாவூர்: தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை திமுக கட்சி சார்பில் பல்வேறு மாவட்டங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கியும், கலை நிகழ்ச்சிகள் நடத்தியும் பல்வேறு விழாக்களை கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் நடத்தியும் வருகின்றனர்.
அதன் ஒருபகுதியாக, தஞ்சாவூர் மாவட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியாக திமுக மாநில மருத்துவ அணி துணை செயலாளர் அஞ்சுகம்பூபதி தலைமையில் மருத்துவ முகாம்கள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, பட்டுக்கோட்டையில் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் மினி மாரத்தான் போட்டிகள் இன்று (ஜூலை 30) நடைபெற்றன.
தஞ்சாவூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான அண்ணாதுரை தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மினி மாரத்தான் போட்டியை, தமிழ் நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கொடியசைத்து துவங்கி வைத்தார்.
இந்த மினி மராத்தான் போட்டி 14 வயதிற்கு உட்பட்டவர்கள், 17 வயதிற்கு உட்பட்டவர்கள், 20 வயதிற்கு மேற்பட்டவர்கள் என 3 பிரிவுகளாக நடத்தப்பட்டது. முன்னதாக பெண்களின் கோலாட்டம், தப்பாட்டம் , மாணவ, மாணவிகளின் சிலம்பம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, சூரப்பள்ளம் பைபாஸ் ரவுண்டானா அருகில் மினி மாரத்தான் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. இந்த பரிசளிப்பு விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சுழற் கோப்பைகளையும், சான்றிதழ்களையும் வழங்கினார்.
பரிசளிப்பு விழாவை தொடர்ந்து பேசிய அவர், "கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு உலகில் எங்கேயும் இல்லாத அளவிற்கு 73 ஆயிரம் பேர் பங்கேற்க கூடிய உலக கின்னஸ் சாதனை மாரத்தான் போட்டிகள் வரும் ஆகஸ்ட் 7ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடைபெற உள்ளது.
உலகிலேயே முதன் முதலாக ஒரே நேரத்தில் 'லாங்கஸ்ட் ரன்னிங் சீரிஸ்' (Longest running series) என்ற பெயரில் 73 ஆயிரம் பேர் சென்னையில் மாரத்தான் போட்டியில் ஓட இருக்கின்றனர். இது சென்னைக்கான பெருமை அல்ல, இந்தியாவின் பெருமை மட்டும் அல்ல, இது உலக அளவிலான பெருமை" என்று தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரை உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பள்ளி மாணவ மாணவியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தேசிய அளவிலான டேக்வோண்டா போட்டியில் சென்னை சிறுவன் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை!