கரோனா நோய்த் தொற்று காரணமாக நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு ஊத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து மாவட்ட, மாநில எல்லைகள் மூடப்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, வெளி மாநில புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்து வந்தனர்.
இந்நிலையில், சிறப்பு ரயில்கள் மூலம் புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது. இதன் தொடர்ச்சியாக, தேனி மாவட்டத்தில் உள்ள வட மாநிலத்தவர்களை அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பும் பணியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. கட்டுமானம், உணவகம், திரையரங்கம், செங்கல்சூளை உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வந்த உத்திரப் பிரதேச மாநில கூலித் தொழிலாளர்களில் 180 பேர் இன்று முதல்கட்டமாக சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இருந்து அழைத்துவரப்பட்ட இவர்களை, தேனியில் உள்ள தனியார் பள்ளியில் ஒருங்கிணைத்து, மருத்துவப் பரிசோதனை செய்து, முகக் கவசம், உணவுப் பொருள்கள் ஆகியவைகள் வழங்கப்பட்டன. இதனையடுத்து இவர்களை மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி ஆகியோர் கை அசைத்து வழியனுப்பி வைத்தனர். தேனியில் இருந்து மதுரை வரையில் நான்கு அரசுப் பேருந்துகள் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து ரயில் மூலமாக உத்தரப் பிரதேசத்திற்கு செல்கின்றனர்.
இதையும் படிங்க... ஆர்ப்பாட்டம் செய்த வடமாநிலத்தவர்கள்: விரட்டிப் பிடித்த போலீஸ்