உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தொற்று தற்போது தமிழ்நாட்டில் அதிவேகமாக பரவி வருகிறது. இதற்கிடையில் தேனி மாவட்டத்தில் 23 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் இரண்டு பேர் தேனி அல்லிநகரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதால், அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
இப்பகுதியிலிருந்து 5 கிமீ தூரம் தீவிரக் கண்காணிப்புப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரியகுளம் ரோடு, மதுரைரோடு, சமதர்மபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள கடைகள் காலை 8 மணி முதல் அடைக்கப்பட்டன.
இதனால் தேனி பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வந்த புதிய உழவர்சந்தையின் விற்பனையும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் அப்பகுதி மக்களுக்கு சிறிய வாகனம் மூலம் காய்கறிகள் கொண்டு சேர்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவு காரணமாக, நகரின் முக்கிய கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளதால் தேனி மாவட்டம் வெறிச்சோடி காணப்படுகிறது.