தேனி: தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் கீழத்தெரு பேச்சியம்மன் கோயில் அருகே சென்னை பதிவெண் கொண்ட நான்கு சக்கர வாகனத்தை இளைஞர் ஒருவர் குறுகிய பாதையில் செலுத்த வாகனம் சாக்கடையில் சிக்கிக்கொண்டது. இதையடுத்து அப்பகுதி வழியாக செல்ல முடியாத பொதுமக்கள் காவல்துறையினருக்குத் தகவல் அளித்தனர்.
இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்குவந்த போடிநகர் காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், வாகனத்தை ஓட்டி வந்தவர், போடிநாயக்கனூர் எஸ்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பது தெரியவந்தது. காவல்துறையினரின் கேள்விக்கு அவர் தயக்கத்துடன் பதிலளித்ததால், சந்தேகம் அடைந்த காவலர்கள், அவரது வாகனத்தை பரிசோதனை செய்தனர்.
அதில், வாகனத்தின் பின்புறத்தில், சாக்கு பையில் பழங்கால சிலை ஒன்று இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து மணிகண்டனை கைது செய்த காவல்துறையினர் வாகனத்தையும், வாகனத்தில் இருந்த பழங்கால சிலையையும் கைப்பற்றி போடி நகர் காவல்நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, ஆண்டிப்பட்டியில் சிலையை தான் பெற்றுக்கொண்டு போடி பகுதிக்கு வந்ததாகவும், கைபேசியில் அழைப்பு வரும் வரை காத்திருக்குமாறு சிலையை கொடுத்தவர் கூறியதகாவும் மணிகண்டன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக போடி காவலர்கள் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சிலைக்கடத்தல் வழக்கு ஆவணங்கள் மாயமான வழக்கு: அறிக்கை தாக்கல்செய்ய உத்தரவு!