கரோனா வைரஸ் நோய் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு கடந்த 24ஆம் தேதி முதல் 21 நாள்கள் ஊடரங்கு உத்தரவு அமல்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து அனைத்து மாவட்ட, மாநில எல்லைகள் மூடப்பட்டன. வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் வெளியேறி தங்களது சொந்த பகுதிக்கு திரும்பினர்.
கரோனா பரவலைத் தடுக்க காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களிடம் சமூக இடைவெளி குறித்தும், ஊரடங்கை மீறுபவர்களை எச்சரித்தும் வருகின்றனர். இந்நிலையில் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மாவட்ட எல்லையான காட்ரோடு சோதனைச் சாவடியில் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் அவ்வழியே நடந்து வந்தவரிடம் விசாரணை செய்தனர்.
விசாரணையில், அவர் தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த ஹக்கீம் ராஜா முகம்மது (48) என்பது தெரியவந்துள்ளது. இவர் கர்நாடக மாநிலம் டும்கூரில் உள்ள தனியார் சிமென்ட் தொழிற்சாலையில் லாரி ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார்.
தற்போது கரோனா முன்னெச்சரிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்களை வெளியேறுமாறு அம்மாநில அரசு உத்தரவிட்டது. பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் டும்கூரில் இருந்து கடந்த 10 நாள்களாக நடந்தே வந்தேன் என காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து அவருக்கு மருத்துவக் குழுவினர் தெர்மல் ஸ்கேன் பரிசோதனை செய்ததில் காய்ச்சல், சளி, இருமல் போன்ற தொந்தரவுகள் ஏதும் இல்லை எனத் தெரியவந்ததது. இருந்த போதிலும் வெளி மாநிலத்தில் இருந்து அவர் வந்ததால் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கண்காணிக்குமாறு மருத்துவக் குழுவினர் உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: பரஸ்பரம் நலம் விசாரித்துக்கொண்ட ஸ்டாலின் சோனியா