கரோனா தடுப்பு நடவடிக்கையாக தேனி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. இதனால் வெளி நாடுகள், வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து தேனி மாவட்டத்திற்கு வருகை தரும் நபர்களை கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தி, மேலும் வீட்டில் 14 நாட்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள புலிக்குத்தி பகுதியை சேர்ந்த செல்வராஜ் மகன் முத்துக்குமார்(32) என்பவரை தேனி காவலன் செயலியின் மூலம் கண்காணிக்கப்பட்டதில், அவர் வீட்டிலிருந்து 2.5 கி.மீ (2,473மீ) தூரம் வரை வெளியில் சென்று வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அரசு அறிவுரைகளை மீறி நோய் பரப்பும் விதமாக வெளியில் சுற்றித் திரிந்ததற்காக அவர் மீது சின்னமனூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் தங்களது தனிமை காலம் முடியும் வரை வீட்டிலேயே இருக்கவும், விழிப்போடு இருக்கவும் அறிவுறுத்தப்படுகிறது. அவர்களில் யாராவது தனிமைப்படுத்துவதை பின்பற்றாமல், நோய்த் தொற்று பரவும் விதமாக வெளியே சுற்றித் திரிந்தால் அருகில் வசிக்கும் பொதுமக்கள் உடனடியாக காவல் நிலையத்திற்கோ அல்லது மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
மேலும், இதுபோன்று தனிமைப்படுத்தப்படுவோர் விதிமுறைகளை மீறினால் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தேனி சிறையில் உள்ள கைதிகளுக்கு கரோனா பரிசோதனை