தேனி: பெரியகுளம் அருகே சொர்க்கம் கோம்பை வனப்பகுதியில் நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் கடந்த 27ஆம் தேதி சிறுத்தை ஒன்று சிக்கி இறந்த விவகாரத்தில் தொடர்ந்து சந்தேகங்கள் எழுந்த வந்த நிலையில், தற்போது அந்த நிலம் தேனி மக்களவை உறுப்பினர் ஓ.பி.ரவிந்தரநாத்திற்கு சொந்தமானதென்று தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
ரவீந்திரநாத் தோட்டத்தில் தற்காலிகமாக ஆட்டுமந்தை அமைத்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன் என்பவர் மீது வழக்குபதிவு செய்து வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து கால்நடை வளர்ப்போர் சங்கத்தினர் கூறுகையில், “வனத்துறையினர் தங்களை தற்காத்துக் கொள்ள அப்பாவிகள் மீது பொய் வழக்கு பதிவு செய்து அடைத்து உதைத்து சித்திரவதை செய்கிறார்கள். இது மனித உரிமை மீறல். இது தொடர்பாக தமிழகம் முழுவதும் உள்ள கால்நடை வளர்ப்போர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபடபோகிறோம்” எனத் தெரிவித்தனர்.
மேலும், நிலத்தின் உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்யாமல் தற்காலிகமாக மந்தை அமைத்தவர் மீது மட்டும் வழக்கு பதிவு செய்வது எந்த வகையில் நியாயம்..? என அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
கடந்த 27ஆம் தேதி சோலார் மின்வேலியில் சிறுத்தை சிக்கியது. சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர், சிறுத்தையைக் காப்பாற்ற முயன்ற போது அது தானாகவே மின்வேலியில் இருந்து தப்பி ஓடியதாகவும், தப்பி செல்லும்போது தேனி உதவி வனப்பாதுகாப்பு அலுவலர் மகேந்திரனை தாக்கி விட்டு தப்பி சென்றதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
சிறுத்தை தாக்கியதில் வனப்பாதுகாப்பு அலுவலர் மகேந்திரனின் இடது கையில் காயம் ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின் வீடு திரும்பினார். தப்பிச் சென்ற சிறுத்தை அதற்கு மறுநாளே தப்பிய இடத்தில் உள்ள அதே மின்வேலியில் சிக்கி உயிரிழந்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
மின் வேலியில் சிக்கி உயிரிழந்த சிறுத்தையை மீட்டெடுத்து கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு அவசர அவசரமாக பிரேத பரிசோதனை செய்து அதே இடத்தில் குழி தோண்டி சிறுத்தையை புதைத்ததாக வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. மின்வேலியில் சிக்கி தப்பிய சிறுத்தை மறுநாளில் அதே மின்வேலியில் சிக்கி உயிரிழந்திருக்க சம்பவம் வன உயிரின ஆர்வலர்கள் இடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது மேலும் இது குறித்து தேனி மாவட்ட வன அலுவலர் விரிவாக விசாரிக்க வேண்டும் என கோரிக்கையும் விடுத்திருந்தனர்.
இதையும் படிங்க: சிறுத்தையின் சாவில் சந்தேகம் - வன ஆர்வலர்கள் புகார்