தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே லட்சுமிபுரத்தில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து வழக்கறிஞர்கள் கூறுகையில், ஏப்ரல் 13ஆம் தேதி மகாராஜன் மற்றும் சின்னசாமி ஆகியோருக்கு இடையேயான நிலப்பிரச்னை சம்பந்தமான வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது மகாராஜன் சார்பாக ஆஜராகிய வழக்கறிஞர் புகழேந்தி, முருகன் என்பவரை குறுக்கு விசாரணை செய்தார்.
அப்போது நீதிபதி முன்பாகவே வழக்கறிஞர் புகழேந்தியை முருகன் மிரட்டியுள்ளார். இதனை நீதிபதி அவ்விடத்திலேயே கண்டித்துள்ளார்.
இந்நிலையில் வழக்கறிஞர் புகழேந்தியை மிரட்டியவர் மீது தென்கரை காவல் துறையினரிடம் வழக்கறிஞர்கள் சார்பாக புகாரளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்தப் புகார் மீது நடவடிக்கை எடுக்காத காவல் துறையினரைக் கண்டித்து நீதிமன்றப் புறக்கணிப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
தொடர்ந்து நடவடிக்கை எடுக்காமல் தாமதப்படுத்தினால், போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என வழக்கறிஞர்கள் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.