கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் அனைக்காரா பஞ்சாயத்து காலணியில் உள்ள காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் வீரணன். இவர், வீட்டிலிருந்து சென்ற தனது மகன் ராஜேஷ் கண்ணன் வீடு திரும்பவில்லை என்று கடந்த 2014ஆம் ஆண்டு வண்டன்மேடு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இதனையடுத்து, சில தினங்களில் தமிழ்நாடு அரசுக்குச் சொந்தமான வனப்பகுதியில் அமைந்துள்ள சுரங்கனார் அருவி அருகே ராஜேஷ் கண்ணன் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த குமுளி காவலர்கள், கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஜான், வினிஸ், சந்தோஷ் ஆகிய மூவரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், வீரணனின் மகள் ராஜேஸ்வரியை ஜான் என்பவர் காதலித்தது வந்துள்ளார். அதற்கு அந்தப்பெண்ணின் சகோதரரான ராஜேஷ் கண்ணன் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், ஜான் தனது நண்பர்களான வினிஸ் மற்றும் சந்தோஷ் துணையுடன் ராஜேஷ் கண்ணனை சுரங்கனார் அருவியில் உள்ள மலை உச்சியிலிருந்து தள்ளிவிட்டு கொலை செய்தது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். இவ்வழக்கு தேனி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்று குற்றவாளிகள் மூவருக்கும் தலா ரூ. 5 ஆயிரம் அபராதத்துடன் கூடிய ஆயுள் தண்டனையை விதித்து தேனி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி அப்துல் காதர் தீர்ப்பளித்துள்ளார்.
மேலும், அபராதத் தொகையைச் செலுத்த தவறினால் கூடுதலாக ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார். இதன் பின்பு குற்றவாளிகள் மூவரும் தகுந்த பாதுகாப்புடன் மத்திய சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இதையும் படிங்க: பொய் வழக்குப்பதிவு: காவல்துறையை கண்டித்து வழக்கறிஞர்கள் ஆர்பாட்டம்