தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் இருந்து கேரளா மாநிலத்திற்கு கஞ்சா கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், கம்பம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, காமயகவுண்டன்பட்டி சாலை ஊமையன் வாய்க்கால் கரையில் சந்தேகத்திற்கிடமாக கேரள பதிவு எண் கொண்ட காரில் கேரள இளைஞர்கள் ஐந்து பேர் இருந்துள்ளனர்.
அவர்களிடம் காவல் துறையினர் விசாரணை செய்து கொண்டிருக்கையில், அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் காவலர்களைப் பார்த்ததும் வண்டியை திருப்பியுள்ளனர். இந்நிலையில், அவர்களை மடக்கிப் பிடித்த காவல் துறையினர் இருவரிடம் இருந்து 1.2 கிலோ கஞ்சா கைப்பற்றினர். மேலும், காரில் இருந்த கேரள இளைஞர்களிடம் 1.1 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது.
இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இரு சக்கர வாகனத்தில் வந்த தெய்வேந்திரன் (39), ரஞ்சித்குமார்(26) ஆகிய இருவரும் கேரள இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்வது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து, கேரள மாநிலம் திருவாஞ்சூரைச் சேர்ந்த பினிஸ்(23), ஹினோ(23), சச்சின்(23), ரஞ்சித் மேத்யூ(20), டோனிஜார்ஜ்(21) ஆகியோர் கேரளாவுக்கு கஞ்சாவைக் கடத்திச் செல்ல முயன்றுள்ளனர்.
இதனையடுத்து, கஞ்சா கடத்த முயன்ற ஏழு பேர் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்த கம்பம் காவல் துறையினர், அவர்களிடமிருந்து 2.3 கிலோ கஞ்சாவை கைப்பற்றி, அவர்கள் பயன்படுத்திய கார் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிளைப் பறிமுதல் செய்தனர்.
இதேபோன்று கம்பம் மெட்டு சாலையில் சைக்கிளில் கஞ்சா கடத்தி வந்த ஜெயக்குமார் (16), ரஞ்சித்குமார்(25) ஆகியோரிடம் 300 கிராம் கஞ்சாவைப் பறிமுதல் செய்த காவல்துறையினர், இருவரையும் கைது செய்து ஜாமீனில் விடுவித்தனர்.