தேனி மாவட்டம் கம்பம், கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனை தொடர்ந்து நடைபெற்று வருவதால் அதனைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் காவல் துறையினர் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில், குமுளி சாலையிலுள்ள தம்மணம்பட்டி பிரிவு அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் ஒருவர் நின்றுகொண்டிருப்பதைக் கண்ட காவல் துறையினர் அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
அப்போது, காவல் துறையினரின் கேள்விக்கு முன்னுக்குப்பின் முரணாகப் பதில் கூறியதால் சந்தேகமடைந்த காவல் துறையினர், அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர்.
அதில், ஐந்து கிலோ கஞ்சா இருந்துள்ளது. இதையடுத்து, அவரை கைது செய்து கூடலூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரிடம் நடத்திய விசாரணையில், கூடலூர் தம்மணம்பட்டியைச் சேர்ந்த வெள்ளைச்சாமி (60) என்பவர் தான் இச்செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.
தொடர்ந்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில், லோயர்கேம்ப் எல்.எப். ரோட்டைச் சேர்ந்த வெற்றிபாண்டி (32) என்பவரிடம் கஞ்சாவைக் கொடுத்து கேரளாவுக்கு கடத்திச் செல்ல முயன்றது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து கஞ்சா வழக்கில் சம்பந்தப்பட்ட வெற்றிபாண்டி, வெள்ளைச்சாமி ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்த கூடலூர் காவல் துறையினர், அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: குட்கா பொருள்கள் பதுக்கிய இருவர் கைது!