தேனி மாவட்டத்தில் தேனி, பெரியகுளம், போடி, சின்னமனூர், கம்பம் ஆகிய ஐந்து நகராட்சிகள், உத்தமபாளையம் பேரூராட்சி மற்றும் அதன் எழு கி.மீ சுற்றளவில் உள்ள இடங்கள் அனைத்தும் கரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இதனால், ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகும் தொடர்ந்து அப்பகுதிகளில் மளிகைக் கடைகள், சந்தைகள், வங்கிகள் செயல்படுவதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
இந்நிலையில், தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள வணிகர்கள் உரிய நேரக்கட்டுப்பாடுகளுடன் கடைகளைத் திறப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.
இதுதொடர்பாக, கம்பம் நகராட்சி அலுவலகத்தில் நேற்று கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜக்கையன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில், கலந்துகொண்ட வணிகர்கள், கம்பத்தில் மளிகைப் பொருள்களை வீடு தேடி வழங்குவதில் சிரமம் உள்ளதால் அரசு உத்தரவுப்படி காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை கடைகளைத் திறப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர்.
இதற்குப் பதிலளித்த ஜக்கையன், வணிகர்களின் கோரிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோருடன் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கம்பம் வணிகர் சங்கத் தலைவர் முருகன், நகராட்சி ஆணையர் கமலா, நகராட்சி அலுவலர்கள் உள்பட பலர் இந்தக் கூட்டத்தில் கொண்டனர்.
இதையும் படிங்க : நெருக்கடியான நேரத்தில் விலையேற்ற நடவடிக்கை கொடூரமானது - சிதம்பரம்