தமிழ்நாடு கள் இயக்க மாநிலத் தலைவர் நல்லசாமி நேற்று (பிப். 19) தேனியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”கள் இறக்குவதும், பருகுவதும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் மக்களுக்கு கொடுத்திருக்கும் உணவு தேடும் உரிமை. இந்த உரிமை 33 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாடு அரசால் பறிக்கப்பட்டிருக்கிறது.
இதை ஈர்க்கும்விதமாக மார்ச் 13ஆம் தேதி ஈரோட்டில் கள் விடுதலை மாநாடு நடைபெறும். நாட்டையே திரும்பிப் பார்க்கவைத்து ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும்விதமாக இந்த மாநாடு அமையும்.
இதற்கு முன்னோட்டமாக வருகிற 27ஆம் தேதி ராணிப்பேட்டை மாவட்டம் கலவை வட்டம் பொன்னம்பலத்தில் கள் இறக்கி சந்தைப்படுத்தப்படும். நாங்கள் அரசிடம் கள் இறக்குவதற்கு அனுமதி கேட்கவில்லை.
கடந்த 1950ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி நடைமுறைக்கு வந்த இந்திய அரசியலமைப்புச் சட்டம் கொடுத்திருக்கும் உரிமைதான் கள் இறக்குவதும், பருகுவதும். உலக அளவில் 108 நாடுகளில் பனை, தென்னை மரங்கள் உள்ளன.
தமிழ்நாட்டைத் தவிர எந்த நாட்டிலும் கள் இறக்கவும், பருகவும் தடை இல்லை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பிகாரில் நித்தீஸ்குமார் தலைமையிலான அரசு பூரண மதுவிலக்கை அமல்படுத்தியது.
சாராய இறக்குமதிகளுக்குத் தடைவிதிக்கப்பட்டது. ஆனால் கள் இறக்குவதற்கும், விற்பனைக்கும் விலக்கு அளிக்கப்பட்டது.
காரோனாவின் கோரப்பிடியில் சிக்கிய கேரளா மாநிலத்தில், அப்போது போடப்பட்ட ஊரடங்கில் மதுக்கடைகள் மூடப்பட்டன. ஆனால் கள்ளுக்கடைகள் திறந்தே வைக்கப்பட்டன. இந்நிலையில் தமிழ்நாட்டில் தடை இருப்பது வேதனைபடக்கூடிய ஒன்று.
ஒட்டுமொத்த உணவு என்று கூறும்போது தமிழ்நாட்டில் மட்டும், இது ஒரு போதைப்பொருள் என உலகளாவிய நடைமுறைக்கு மாறாக நிரூபித்தால் அரசு 10 கோடி ரூபாயை பரிசாகப் பெற்றுக் கொள்ளட்டும். எனவே கள்ளுக்கான தடையை முதலமைச்சர் நீக்க வேண்டும்.
ஆட்சியைத் தக்கவைக்க கள் விடுதலை செய்ய அரசு முன்வர வேண்டும். முதலமைச்சர் தடையை நீக்கவில்லை என்றால், எதிர்க்கட்சி தேர்தல் அறிக்கையில் கள்ளுக்கான தடையை நீக்க உறுதியளித்தால் அவர்களுக்கு ஆதரவு கிடைக்கும்” எனக் கூறினார்.
இதையும் படிங்க: நாமக்கல்லில் விசைத்தறி தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!