தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து இருந்து கேரளாவுக்கு குமுளி, கம்பம்மெட்டு, போடி மெட்டு ஆகிய சாலை வழியாக சட்டவிரோதமாக ரேசன் அரிசி கடத்தப்பட்டு வருகிறது. இதனைத் தடுக்க வருவாய்த்துறை பறக்கும்படை, உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் கட்டப்பனையைச் சேர்ந்த ராஜன் மகன் ரோபின் (29) கேரளாவிலிருந்து கம்பம் நோக்கி தனது ஜீப்பில் வந்து கொண்டிருந்தார். அவர் வந்த ஜீப் கம்பம் மெட்டு மலைச்சாலை சாஸ்தா கோவில் 10ஆவது கொண்டை ஊசி வளைவில் வந்தபோது, கம்பத்தில் இருந்து கேரளா நோக்கிச் சென்ற டாடா சுமோ ஒன்று அவரது வாகனத்தின் வலது ஓரமாக இடித்துவிட்டு, ரோட்டின் வலதுபுற பள்ளத்தில் கவிழ்ந்து மரத்தில் மோதி நின்றது.
கவிழ்ந்த வாகனத்தில் அரிசி மூடைகள் இருந்ததால் இதுகுறித்து அப்பகுதி வழியாகச் சென்றவர்கள் கம்பம் வடக்கு காவல் நிலைய காவல் துறையினரிடம் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் விசாரித்ததில் வாகனத்தை ஓட்டி வந்தவர் கம்பம் புதுப்பட்டி பேச்சியம்மன் கோயில் தெருவைச் மருதுபாண்டி(31) என்பதும், இவர் சட்டவிரோதமாக சுமார் 1500 கிலோ எடைகொண்ட 30 மூடைகள் ரேஷன் அரிசியை தனது ஜீப்பில் (டாடா சுமோ வாகனம்) கேரளாவுக்குக் கடத்தி சென்றதும் தெரிய வந்தது.
பலத்த காயமடைந்திருந்த மருதுபாண்டியன் முதலில் கம்பம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
மேலும், விபத்திற்குள்ளான வாகனத்திலிருந்த அரிசியைக் கைப்பற்றிய காவல் துறையினர், இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஜப்பானியர்களால் கொல்லப்பட்ட ஒன்றரை லட்சம் தமிழர்கள் - 2ஆம் உலகப்போரின் மிகப் பெரும் அவலம்