உடலில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிப்பது இன்றைய காலக்கட்டத்தில் ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது. இந்த பிரச்சனை உலகெங்கிலும் கிட்டத்தட்ட எல்லா வயதினரையும் பாதிக்கிறது. வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாகக் கருதப்படும் உணவு மற்றும் உடற்பயிற்சி உள்ளிட்ட ஒழுக்கமற்ற மற்றும் சமநிலையற்ற பழக்கவழக்கங்கள் இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
அதிக கொலஸ்ட்ரால், சைலண்ட் கில்லர் நோயாக மாறி வருகிறது. காரணம், கொலஸ்ட்ரால் இதயம் தொடர்பான பிரச்சனைகளின் அபாயத்தை அதிகரிக்கிறது. எனவே, அதிக கொலஸ்ட்ராலால் பாதிக்கப்பட்டவர்கள், வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்து, இயற்கையாகவே கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும் சரியான உணவுகளைத் தேர்ந்தெடுக்குமாறு மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
கொலஸ்ட்ராலை குறைக்கும் உணவுகள்:
வால்நட்ஸ்: வால்நட்லில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளதால், தினமும் காலை உணவில் வால்நட் பருப்புகள் சேர்த்துக்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. தினசரி வால்நட் சாப்பிட்டு வரும் போது கொலஸ்ட்ரால் அளவு குறைந்து இதய நோய் அபாயத்தை குறைக்கிறது.
பாதாம்: பாதம் நல்ல கொலஸ்ட்ராலின் அளவை அதிகரித்து கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கிறது. தினசரி காலை வெறும் வயிற்றில் பாதம் சாப்பிட்டு வந்தால் கெட்ட கொழுப்பின் அளவுகள் குறைவதாக ஹெல்த் ஹார்வர்ட் எஜுகேஷன் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஆலிவ் ஆயில்: சந்தையில் கிடைக்கும் மற்ற எண்ணெய்களை ஒப்பிடுகையில், ஆலிவ் எண்ணெய் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என கூறப்படுகிறது. இந்த எண்ணெய்யை பயன்படுத்தி சமைக்கப்படும் உணவு ஆரோக்கியத்திற்கு நன்மையை தருவது மட்டுமல்லாமல், நல்ல கொலஸ்ட்ராலின் அளவை அதிகரிக்கிறது என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.
ஆளிவிதைகள்: பல ஊட்டச்சத்துக்களுடன், ஆளிவிதைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இது கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கிறது. ஆளி விதைப் பொடியை 3 மாதங்கள் தொடர்ந்து காலையில் சாப்பிட்டு வந்தால் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு குறையும் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.
நடைப்பயிற்சி, உடற்பயிற்சி அல்லது யோகா: காலையில், வாக்கிங் அல்லது உடற்பயிற்சி செய்வது இரத்தத்தில் உள்ள நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது. அதே போல, ஏரோபிக் உடற்பயிற்சி இரத்தத்தில் உள்ள நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது. இது தவிர யோகா நமது ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது.
ஆரஞ்சு சாறு: காலையில் ஒரு கிளாஸ் வைட்டமின் சி நிறைந்த ஆரஞ்சு ஜூஸ் குடிப்பதால் கொழுப்பின் அளவைக் குறைக்கலாம் என்று தேசிய சுகாதார சேவை மற்றும் மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர் .ஆரஞ்சு பழத்தில் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கும் ஃபிளாவனாய்டுகள் உள்ளது.
பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்