தண்ணீர் பிரச்னையைப் போக்கவும், இயற்கை வளத்தைப் பாதுகாக்கவும் நீர் ஆற்றல் துறையை மத்திய அரசு உருவாக்கியது. இத்துறையின் கீழ் தண்ணீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் தண்ணீர் சேகரிப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
தேனி மாவட்டம், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குடிமராமத்துப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இம்மாவட்டத்தில் உள்ள குளம், கண்மாய் ஆகியவற்றின் நீர்வழிப்பாதை, கரை உயர்த்துதல், கண்மாயை தூர்வாருதல் உள்ளிட்ட பணிகள் அந்தந்த பகுதி விவசாயிகளின் பங்களிப்புடன் சிறப்பாக நடைபெற்றுவருகின்றன.
இந்நிலையில், நீர் ஆற்றல் துறையின் திட்டக்குழுவினர் தேனி மாவட்டம் போடி தாலுகாவிற்கு உட்பட்ட பூதிப்புரம் பகுதியில் உள்ள ராஜபூபால சமுத்திரம் கண்மாயில் நடைபெற்றுவரும் குடிமராமத்துப் பணிகளை ஆய்வு செய்தனர்.
இதில், மத்திய ஒருங்கிணைப்புக்குழு அலுவலர் அசோக்குமார் ஆர். பர்மர், வட்டார ஒருங்கிணைப்பு அலுவலர் சுதீப் ஸ்ரீவத்சவா, மத்திய நிலத்தடி நீர் வளர்ச்சித் துறை தொழில்நுட்ப அலுவலர் ஶ்ரீநிவாஸ் ஆகியோர் தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவுடன் இணைந்து குடிமராமத்துப் பணிகளைப் பார்வையிட்டனர்.
ஆய்வின்போது அங்கிருந்த விவசாயிகள் அலுவலர்களிடம், கண்மாயின் நீர் வழித்தடத்தில் உள்ள தடுப்பணைகளின் உயரத்தை உயர்த்தும்படி கோரிக்கைவிடுத்தனர்.