தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாகத் திகழ்வது முல்லைப் பெரியாறு அணை. இந்த அணையில் நீர் தேக்குவதற்கு அனுமதிக்கப்பட்ட அளவு 142 அடியாகும். கடந்த ஆகஸ்ட் மாத துவக்கத்தில் பெய்த தென்மேற்குப் பருவமழையால் அணையின் நீர்மட்டம் 137 அடி வரை உயர்ந்தது.
இதையடுத்து, படிப்படியாக மழை அளவு குறைய தொடங்கியதால் அணைக்கு நீர்வரத்து குறைந்து நீர்மட்டமும் 126 அடியாக சரிந்தது. இந்நிலையில், தற்போது அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிளான தேக்கடி, சப்பாத்து, ஆனவச்சால் உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் அணையின் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக 400 முதல் 600 கன அடி வரை நீர்வரத்து இருந்த நிலையில், நேற்று (அக்டோபர் 12) பெய்த கனமழையால் விநாடிக்கு 1,529 கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.
தேக்கடியில் 26மி.மீ, பெரியாறு அணையில் 45.2மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது. இன்று (அக்டோபர் 13) காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 126.85 அடியாக உள்ளது. நீர் இருப்பு 4,018மி.கன அடியாக உள்ள நிலையில் அணையில் இருந்து 1,400கன அடி நீர் தமிழ்நாட்டுக்கு வெளியேற்றப்படுகின்றன.
இதனிடையே, முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டம் உயரக்கூடும் என்பதால் தேனி, மதுரை உள்ளிட்ட ஐந்து மாவட்ட விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.