தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தினசரி மார்க்கெட் தெருவில் வசித்து வரும் முருகன்(50) -சித்ரா தம்பதியினர், அங்கு ஐஸ் கம்பெனி நடத்திவருகின்றனர். இந்த தம்பதிக்கு தவமணி(21) என்ற ஒரு மகளும், மகனும் உள்ளனர். இதில் மகள் தவமணி தேனியில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த திருமணமான ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். இதனையறிந்த பெற்றோர் அவரைக் கண்டித்து வேறொரு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து கொடுப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று மாலை (ஆக. 13) உடல்நிலை சரியில்லாமல் தவமணி இறந்து விட்டதாகக் கூறி, அவரது சடலத்தை ஆண்டிபட்டி மயானத்தில் தகனம் செய்வதற்கு முருகன்-சித்ரா தம்பதியினர் முயன்றுள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், பிரேதத்தைக் கைப்பற்றி சோதனை மேற்கொண்டுள்ளனர். அப்பொழுது, உயிரிழந்த தவமணி கழுத்தில் காயம் இருப்பதைக் கண்டறிந்தனர். இதனையடுத்து சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, பெற்றோரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், தனது மகள் தவமணிக்குத் திருமண ஏற்பாடுகள் செய்து வந்த நிலையில், அதனை மறுத்து சண்டையிட்டுள்ள நிலையில், அவரைக் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக முருகன் வாக்குமூலம் அளித்துள்ளார். அதனடிப்படையில் முருகன் - சித்ரா தம்பதியினர் மீது வழக்குப்பதிவு செய்த ஆண்டிபட்டி காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் ஆண்டிபட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க...சொத்து தகராறு; மகனை சுத்தியால் அடித்து கொன்ற தந்தை!