தமிழ்நாடு - கேரள எல்லையில் அமைந்துள்ளது தேனி மாவட்டம். கேரளாவின் தேக்கடி, சபரிமலை, ஆலுவா உள்ளிட்ட முக்கியப் பகுதிகளுக்கு குமுளி மலைச்சாலை முக்கிய வழித்தடமாகும். இவற்றில் குமுளி எல்லையில் உள்ள தமிழ்நாடு பகுதிகளில் சாலையோரமாக கடந்த 30 ஆண்டுகளாக ஆக்கிரமிப்புக் கடைகள் செயல்பட்டுவருகின்றன. இதனால் சாலை குறுகலாகி சபரிமலை சீசன் நேரங்களில் எல்லையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுவந்தன.
திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ்சாலையின் கட்டுப்பாட்டில் உள்ள அப்பகுதியில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை கடந்த நவம்பர் மாதம் அகற்றுமாறு மாவட்ட நிர்வாகம் மூலம் உத்தரவு பிறப்பித்து நெடுஞ்சாலைத் துறையினர் சுற்றறிக்கை அனுப்பினர்.
இதனிடையே கடைகளை அகற்றுவதற்கு கால அவகாசம் கோரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து நவம்பரில் ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை. ஆனால் வெகுநாள்களாகியும் கடைகளை அகற்றாமல் ஆக்கிரமிப்பாளர்கள் இருந்துவந்தனர்.
இந்நிலையில் குமுளியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் ஜேசிபி வாகனங்களுடன் வந்திருந்தனர். ஆனால் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்த கடைக்காரர்கள் ஜேசிபி வாகனத்தின் முன்பாக படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கிருந்த காவல் துறையினர் தடுத்து நிறுத்த முற்பட்டபோதும் அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தொடர்ந்து ஜேசிபி வாகனங்களை முற்றுகையிட்டனர்.
பின்னர் காவல் துறையினரின் பாதுகாப்புடன் குமுளியிலிருந்த சுமார் 30 கடைகளும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. ஆக்கிரமிப்புகளை அகற்றிய பின்னர் சாலைகளை விரிவாக்கம் செய்யும் பணிகளில் நெடுஞ்சாலைத் துறையினர் ஈடுபட உள்ளனர். இதனால் தமிழ்நாடு - கேரள எல்லையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டு அங்கு கூடுதல் காவல் துறையினர் குவிக்கப்பட்டனர்.
இதையும் படிங்க...மத்திய அரசு ஜனநாயகத்திலிருந்து விடுபட நினைக்கிறது - ராகுல் காந்தி