தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள டி.சிந்தலைச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் வீரக்குமார் என்ற வீரப்பன் (49). டீக்கடை தொழில் செய்து வந்த இவருக்கு, கவிதா என்ற மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இவர் வீட்டிற்கு, அதே பகுதியைச் சேர்ந்த மணிக்குமார்(24) என்பவர் அடிக்கடி வந்து சென்றுள்ளார். அப்போது கவிதாவுடன் மணிக்குமாருக்கு பழக்கம் ஏற்பட்டது.
இதனால் கணவன் - மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் திருப்பூரில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு குழந்தைகளுடன் கவிதா சென்று விட்டார். இதையடுத்து, மனைவி பிரிந்து சென்றதற்கு மணிக்குமார் தான் காரணம் என 2016ஆம் ஆண்டு மார்ச் 17ஆம் தேதி அவரை அரிவாளால் வீரக்குமார் வெட்டிக் கொலை செய்தார். இது தொடர்பாக இறந்தவரின் தந்தை கனகராஜ் அளித்த புகாரில் வழக்குப்பதிவு செய்த தேவாரம் காவல்துறையினர், வீரக்குமாரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நேற்று (ஜூலை 9) தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் குற்றவாளி வீரக்குமாருக்கு ஆயுள் தண்டனை, ரூ. 1,000 அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.