ஊரடங்கு உத்தரவால் மதுபானக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் கள்ளச்சாராய விற்பனை அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த காவல் துறையினர் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அவர்கள் ரோந்துப் பணி மேற்கொண்டனர்.
அப்போது கண்டமனூர் அருகே ராஜேந்திரா நகர் பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுவது கண்டறியப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் 150 லிட்டர் ஊறலில் கள்ளச்சாராயம் காய்ச்சி அதனை 300 மி.லி பாட்டிலில் நிரப்பி விற்பனைக்கு தயார் நிலையில் வைத்திருந்தனர். அதனை காவல் துறையினர் அழித்தனர். இது தொடர்பாக ராஜேந்திர நகரைச் சேர்ந்த மலைச்சாமி (32), முருகன் (55) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். மேலும் தப்பியோடிய வேலுச்சாமி (67) என்பவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

இதேபோல் போடி அருகே உள்ள கோணாம்பட்டியில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சியதாக முகம்மது சித்திக் (49), பண்ணாயிரம் (40), தவசெல்வம் (43), முருகன் (46) ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து போடி தாலுகா காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க... கள்ளச்சாராய ஊறல் கண்டுபிடிப்பு: தப்பியோடிய இளைஞருக்கு போலீஸ் வலை!