தேனி மாவட்டம் போடி நந்தவன தெருவைச் சேர்ந்தவர் வளர்மதி (30). இவருக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விட்டு பிரிந்து விவாகரத்து பெற்று தனியாக வசித்து வருகிறார்.
இவருக்கு சொந்தமாக கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள பி.எல். ராம் என்ற இடத்தில் ஏலக்காய் தோட்டம் உள்ளது. அதனை பராமரித்து வந்த வளர்மதி, ஏலத்தோட்டத்திற்கு செல்வதற்காக ஜீப்பில் சென்று வருவது வழக்கம். பி.எல்.ராம் பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் ராஜா (30) என்பவரது ஜீப்பில் சென்று வந்துள்ள வளர்மதிக்கு அவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவருக்கும் திருமணமாகி விவாகரத்து பெற்றுள்ளார் எனக் கூறப்படுகிறது. இருவருக்கிடையேயான இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறி பல வருடங்களாக நீடித்து வந்துள்ளது.
இந்நிலையில் ராஜாவுக்கும் வளர்மதிக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதில் நேற்று நள்ளிரவு ராஜா, வளர்மதி வீட்டுக்கு வந்த போது மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த வளர்மதி, வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து ராஜாவை சரமாரியாக வெட்டியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயரிழந்தார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போடி நகர் காவல் துறையினர் வளர்மதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த கொலை வழக்கில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா எனவும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க...இளைஞரைக் கல்லால் அடித்துக் கொலை செய்த உறவினர் கைது