தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ளது பிஸ்மி நகர். இந்த குடியிருப்பில் அரசு மருத்துவர்கள், செவிலியர், ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள், தொழில் அதிபர்கள் என சுமார் 100க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், கார் டீலர் தொழில் செய்து வரும் பால்பாண்டி (42) என்பவர், தனது குடும்பத்தினருடன் நேற்று (ஆக.14) உறவினர் வீட்டிற்கு தேனிக்குச் சென்றுள்ளார். மதியம் வீடு திரும்பியவர் வீட்டின் கதவு உடைக்கப்பட்டிப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த இரண்டு சவரன் தங்கச் சங்கிலி திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கானா விலக்கு காவல் துறையினர், தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் கைரேகைகளை சேகரித்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில நாள்களுக்கு முன் இதே குடியிருப்பில் வசித்து வரும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் ஜான்சன் சாமுவேல் என்பரது வீட்டில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் திருடு போயிருந்த நிலையில், தற்போது பட்டப்பகலிலேயே திருடர்கள் கைவரிசையை காட்டியுள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.