தேனி மாவட்டம், கம்பம் அருகே சுருளி அருவி அமைந்துள்ளது. மேகமலை வனப்பகுதியில் உள்ள தூவணம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீர், மலைப் பகுதிகளில் உள்ள மூலிகைச்செடிகளின் மீது படர்ந்து விழுவதால் தண்ணீர் குளிர்ச்சியாகவும், மூலிகைத் தன்மை வாய்ந்ததாகவும் திகழ்கிறது. கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே பிப்ரவரி மாதத்தில் இருந்து அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய அளவு மழை இல்லாததால், சுருளி அருவி வறண்டு காணப்பட்டது.
மேலும் கரோனா வைரஸ் பரவலால் மார்ச் முதல் சுற்றுலா பயணிகள் வருகைக்கும் தடை விதிக்க்கப்பட்டதால் தொடர்ந்து சுருளி அருவி வெறிச்சோடி காணப்பட்டது. இந்நிலையில் கேரளாவில் தற்போது தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து வருவதால், தேனி மாவட்டத்திலும் சாரல் மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக மேகமலை வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக தொடர்மழை பெய்ததையடுத்து, சுருளி அருவிக்கு தற்போது நீர் வரத்து அதிகரித்துள்ளது.
இதனால் கடந்த ஆறு மாதங்களாக வறண்டிருந்த சுருளி அருவியில், தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. எனினும் கரோனா அச்சத்தால் சுற்றுலா பயணிகளுக்கான தடை நீடிப்பதால் அருவிப் பகுதிக்குச் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.