தேனி மாவட்டம் போடி அருகே உள்ளது போடிமெட்டு மலைச்சாலை. கொச்சின் - இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் 18 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட இந்த மலைச்சாலையானது தமிழ்நாடு - கேரளா எல்லையை இணைக்கக்கூடிய முக்கிய வழித்தடமாகும்.
மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் கனமழை பெய்யும்பொழுதும், போடிமெட்டில் பாறைகள் உருண்டு வருவதும், மண்சரிவு ஏற்படுவதும் தொடர் கதையாகி வருகிறது.
இப்பகுதியில் நேற்றிரவு பெய்த கனமழையால் போடிமெட்டு தேசிய நெடுஞ்சாலையிலுள்ள 12ஆவது கொண்டை ஊசி வளைவில் மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் கேரள மாநிலம் மூணாரிலிருந்தும், தமிழ்நாட்டின் தேனி மாவட்டம் போடிமெட்டு வழியாகவும் செல்லக்கூடியவர்கள் பல மணி நேரமாகச் சாலையைக் கடக்க முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகினர்.
நெடுஞ்சாலைத்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்புப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். குறுகலான மலைச்சாலை என்பதால் மண் சரிவை அப்புறப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இறந்த பெண் கணக்கில் 25 லட்சம் ரூபாய் அபேஸ் - கையும், களவுமாக சிக்கிய வங்கி அலுவலர்கள்