தேனி மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக, மூல வைகை ஆற்றில் வரலாறு காணாத அளவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக கரையோரப்பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.
இதனிடையே ஆண்டிபட்டி தாலுகா மயிலாடும்பாறை அருகே உள்ள செங்குளம் கிராமத்தைச் சேர்ந்த சுப்புலட்சுமி (60) என்ற மூதாட்டி நேற்று (நவ.19) காணாமல்போனதாக காவல் துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது.
இதையடுத்து வைகை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் மூதாட்டி அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகத்தின் அடிப்படையில் காவல் துறையினர் தேடிவந்தனர்.
இந்நிலையில் சம்பவ இடத்தில் இருந்த பல கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அம்மச்சியாபுரம் வைகை ஆற்றங்கரையில் மூதாட்டியின் உடல் சடலமாக கரை ஒதுங்கியது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்குத் தகவல் அளித்தனர்.
அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் கரை ஒதுங்கியது சுப்புலட்சுமியின் உடல்தான் என்பதை உறுதிசெய்த பிறகு, உடற்கூராய்வுக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த கானா விலக்கு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். வைகை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மூதாட்டி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 'உதயநிதி ஸ்டாலின் மீது நயன்தாரா புகார் கொடுக்கப்போகிறார்' - ராஜேந்திர பாலாஜி