தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள டி. சுப்புலாபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டுவருகிறது. ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இந்த ஆண்டு நாற்பது குழந்தைகள் முதலாம் வகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கோடை விடுமுறைக்கு பின்னர் 2019 - 20ஆம் கல்வியாண்டிற்கான பள்ளி இன்று திறக்கப்பட்ட நிலையில், முதல் நாளான இன்று பள்ளிக்கு வருகை தந்த மாணவ – மாணவிகளை அசத்தும் வகையில் ஆசிரியர்கள் வரவேற்பு அளித்தனர். இளம் பிள்ளைகளான மாணவர்களை மாலை அணிவித்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக பள்ளிக்கு ஆசிரியர்கள் அழைத்து வந்தனர். இதேபோல தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்த 80 மாணவ – மாணவிகளையும் மாலை, மேளதாளங்களுடன் வரவேற்பு தந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மாரிமுத்து கலந்துகொண்டார். இதன் பின்னர் தேனி மாவட்டத்திலேயே முதல் முறையாக டி.சுப்புலாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தொடுதிரையுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பு பிரிவை தொடங்கிவைத்தார்.
மேலும் இந்தப் பள்ளியில் ஆசிரியர்களின் வருகையை கண்காணிக்கும் பயோ மெட்ரிக் எனப்படும் கைரேகை வருகை பதிவேடும் தொடங்கிவைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் டி. சுப்புலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு பள்ளிக்கு பல்வேறு பொருட்களை தானமாக வழங்கினர்.