தேனியிலிருந்து போடிநாயக்கனூர் நோக்கி 2018ஆம் ஆண்டு சென்ற அரசுப்பேருந்தில் பயணம் செய்த விஜயா (55) என்ற பெண் போடி பூங்கா பேருந்துநிறுத்தத்தில் இறங்கும் முன்பு, பேருந்தை ஓட்டுநர் இயக்கியதால் நிலை தடுமாறி கீழே விழுந்தார். படுகாயமடைந்த அவர் போடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து விஜயாவின் மகன் ரவி அரசுப் போக்குவரத்துக் கழகம் இழப்பீடு வழங்கக்கோரி தேனி மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, உயிரிழந்த விஜயாவின் குடும்பத்திற்கு 9 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் இழப்பீட்டுத் தொகையாக அரசுப் போக்குவரத்துக் கழகம் வழங்க வேண்டும் என 2019ஆம் ஆண்டு உத்தரவிட்டார்.
இதேபோன்று 21.12.2014 அன்று தேனி அன்னஞ்சி விலக்கு பகுதியில் ரியா என்ற திருநங்கை இருசக்கர வாகனத்தில் வந்தபோது அரசுப் பேருந்து மோதி தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ரியாவின் இழப்பிற்கு அரசுப் போக்குவரத்துக் கழகம் இழப்பீடு தொகை வழங்கக்கோரி திருநங்கையின் பெற்றோர் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கு விசாரணையும் முடிவுற்ற நிலையில் 2019ஆம் ஆண்டு ரியாவின் பெற்றோருக்கு 14 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த இரண்டு வழக்குகளிலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசுப் போக்குவரத்துக் கழகம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டு ஏழு மாதங்கள் ஆன நிலையில் இழப்பீடு தொகை வழங்காததால் மீண்டும் பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். வழக்கை விசாரித்த கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி அப்துல்காதர், அரசுப் பேருந்துகளை ஜப்தி செய்ய உத்தரவிட்டதன் பேரில், நீதிமன்ற ஊழியர்கள் இன்று தேனியிலிருந்து திண்டுக்கல், பழனி ஆகிய வழிகளில் சென்ற இரண்டு அரசுப் பேருந்துகளை ஜப்தி செய்து தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நிறுத்தினர்.