தேனி மாவட்டம் கம்பம் புதுப்பள்ளிவாசல் தெருவில் வசித்துவரும் சகோதரர்கள் முகமது இஷ்ஹாஹ் மற்றும் முகமது சாதிக். இவற்றில் முகமது சாதிக் என்பவர் இந்திய தேசிய லீக் கட்சியின் மாநிலச் செயலாளராக உள்ளார். இவர் குளோபல் பிளேஸ்மென்;ட் அண்டு ரெக்ரூட்மென்ட் சர்வீசஸ் என்ற பெயரில் கம்பம் மெட்டு சாலையில் டிராவல்ஸ் மற்றும் கம்ப்யூட்டர் சென்டர் நடத்திவருகின்றார்.
2018ஆம் ஆண்டு கம்பம் மெட்டு சாலையில் வசித்து வரும் முகம்மது அலி ஜின்னா என்பவரிடம் மொரீசியஸ் நாட்டில் வேலை வாங்கித்தருவதாகக் கூறி சகோதரர்கள் இருவரும் இரண்டு தவனைகளாக 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பணம் பெற்றுள்ளனர்.
இதையடுத்து அதே ஆண்டு நவம்பர் மாதம் 7ஆம் தேதி முகம்மது அலி ஜின்னாவிற்கு சுற்றுலா விசா கொடுத்து ஒரு வாரத்தில் உங்களுக்கு கம்பெனி விசா கிடைக்கும் எனக்கூறி வேலைவாய்ப்பிற்கான கடிதத்துடன் மொரீசியஸ் நாட்டிற்கு அனுப்பிவைத்துள்ளனர். மேலும் இவருடன் சேர்த்து ஜாஹிர்உசேன் என்பவரிடமும் இதேபோன்று பணம் பெற்றுக் கொண்டு சுற்றுலா விசா கொடுத்து அனுப்பிவைத்துள்ளனர்.
ஆனால் மொரீசியஸ் விமான நிலையத்தில் பரிசோதனை செய்த அந்நாட்டு அலுவலர்கள், இந்தப் பணியானை போலியானது எனக்கூறி இருவரையும் இந்தியாவிற்குத் திருப்பி அனுப்பிவிட்டனர்.
ஏமாற்றமடைந்து தாயகம் திரும்பிய இருவரும் மோசடி செய்த சகோதரர்களிடம் தங்களது பணத்தைத் திருப்பி தரும்படி இரண்டு வருடங்களாகக் கேட்டு வந்துள்ளனர். ஆனால் பணத்தைத் தர மறுத்து அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. எனவே வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்திருந்தனர்.
அதனடிப்படையில் மாவட்ட பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல் துறையினர் முகமது இஷ்ஹாஹ் மற்றும் அவரது சகோதரர் முகமது சாதிக் ஆகிய இருவர் மீது போலி விசா, ஆவணங்கள் தயார் செய்தல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய இந்திய தேசிய லீக் கட்சியின் செயலாளரான முகமது சாதிக் இந்து – முஸ்லீம்களுக்கிடையே சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பதிவிட்டதாக நேற்றைய தினம் கம்பம் வடக்கு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.