முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் ஓ.பழனியம்மாள் நாச்சியார் (95) கடந்த மாதம் உடல் நலக் குறைவு காரணமாக தேனியில் உள்ள நட்டாத்தி நாடார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பின் உடல்நலம் தேறி வீடு திரும்பினார். இதையடுத்து மீண்டும் பிப். 22ஆம் தேதி அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதனிடையே நேற்று முன்தினம் ஓ.பன்னீர்செல்வம் அவரை மருத்துவமனைக்கு சென்று சந்தித்து உடல் நலம் விசாரித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்றிரவு 9:30 மணி அளவில் அவர் உடல்நிலை மோசமாக உள்ளதாக கூறி மருத்துவமனை நிர்வாகம் செயற்கை சுவாசக் கருவிகளை பொருத்தி அவரை பெரியகுளத்தில் உள்ள ஓ.பன்னீர் செல்வத்தின் இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர். அதன்பின் நேற்றிரவு 10.02 மணி அளவில் மரணம் அடைந்தார்.
இதையறிந்த ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் இருந்து விமான மூலம் திருச்சி வந்து, திருச்சியில் இருந்து சாலை மார்க்கமாக பெரியகுளம் சென்று, தாயாரின் உடலை பார்த்து அவரது கால்களை பிடித்து கதறி அழுதார். இன்று காலை முதல் ஓபிஎஸ்-இன் ஆதரவாளர்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நேரடியாக வந்து அஞ்சலி செலுத்தி அவருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
அந்த வகையில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, ஆண்டிபட்டி திமுக சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன், பெரியகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார், திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்செல்வன் ஆகியோர் வருகை அஞ்சலி செலுத்திவிட்டு சென்றனர்.
இறுதியாக மாலையில் ஓபிஎஸ் தாயார் பழனியம்மாளுக்கு வீட்டில் உறவினர்கள் மற்றும் பெண்கள் கூடி இறுதி மரியாதை செலுத்திய பின்பு, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மூங்கில் தேரில் ஓபிஎஸ் இன் தாயார் உடல் வைக்கப்பட்டு பெரியகுளம் தென்கரை தெற்கு அக்கரகாரம் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து புறப்பட்டது. தேவர் சிலை மற்றும் காந்தி சிலை வழியாக வடகரை பகுதியில் உள்ள நகராட்சியின் பொது மயானத்தில் உள்ள எரியூட்டு மையத்தில் வைக்கப்பட்டது. அங்கு தாய்க்கு தலைமகனாக இருந்து ஓபிஎஸ் மொட்டை அடித்து இரவு 7 மணியளவில் உடலுக்கு தீ மூட்டி தகனம் செய்தார்.
இதையும் படிங்க: ஓபிஎஸ் தாயார் மறைவிற்கு அரசியல் கட்சி பிரமுகர்கள் நேரில் அஞ்சலி!