தேனி: கூடலூர் அருகே அத்துமீறி வனத்திற்குள் நுழைந்ததாகவும், ரோந்து பணியில் ஈடுபட்ட வனத்துறையினரை கத்தியை காட்டி மிரட்டியதாகவும் கூறி வனத்துறையினர் விவசாயியை சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கூடலூர் அருகே உள்ள குள்ளப்பகவுண்டன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஈஸ்வரன் என்பவர் வண்ணத்திப்பாறை பகுதியில் தனது தோட்டத்திற்கு வேலைக்குச் சென்று உள்ளார். அவர் தோட்டத்திற்கு அருகில் உள்ள வனப்பகுதிக்குள் சென்றதாக கூறப்படுகிறது. அந்தப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட கூடலூர் வனத்துறையினர், ஈஸ்வரன் அத்துமீறி வனத்திற்குள் நுழைந்ததாகவும், ரோந்து பணியில் ஈடுபட்ட வனத்துறையினரை கத்தியைக் காட்டி மிரட்டியதால் துப்பாக்கியால் சுட்டதாகவும் தகவல் தெரிவித்து உள்ளனர்.
இது சம்பவம் குறித்து அறிந்து ஆத்திரம் அடைந்த ஈஸ்வரனின் உறவினர்கள் தேனி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து உயிரிழந்த ஈஸ்வரனின் மகள் கூறும்போது, "எனது அப்பாவை காணோம் என்று பல இடங்களில் தேடிவந்தோம்.
பின், திடீரென அவர் உயிரிழந்து விட்டதாகவும், அவரை மருத்துவமனைக்குக் கொண்டு வந்துள்ளதாகவும் கூறி கம்பம் அரசு மருத்துவமனை, தேனி காணாவிலக்கு மருத்துவமனையில் வைத்துள்ளோம் என அழைக்கழித்தார்கள். இதுகுறித்து எங்களுக்கு காவல்துறையும் சரியாக பதில் கூறவில்லை.
அவரைத் தேடி அலைந்து திரிந்தபோது, எனது அப்பாவை வனத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் என யாரும் அருகில் இல்லாமல் சடலமாக ஆம்புலன்சில் வைத்துவிட்டு சென்றனர். மருத்துவமனைக்குள் உடலை கொண்டு செல்லாமல் ஏன் வெளியே வைத்திருந்தீர்கள்? உள்ளே கொண்டு போவதில் என்ன சிக்கல்? எனது தந்தையின் மரணம் குறித்து காவல்துறை கூட சரியாக எந்த தகவலும் கூறவில்லை.
எனது அப்பாவை ஏன்? என்ன காரணத்திற்காக துப்பாக்கியால் சுட்டுக் கொன்றீர்கள்? துப்பாக்கியால் சுட்டுக் கொல்வதற்கு அவர் என்ன அவ்வளவு பெரிய ஆளா? எங்காவது திருடினாரா? இல்லை கொள்ளையடித்தாரா? இப்படி துப்பாக்கியால் சுடும் அளவிற்கு அவரென்ன தீவிரவாதியா?. அவர் தானுண்டு தன் வேலை உண்டு என்றிருப்பார்.
ஊருக்குள் பலரும் பெரிய பெரிய தவறுகளை செய்கிறார்கள். அவர்களை விட்டுவிட்டு இவரை துப்பாக்கியால் சுடக் காரணம் என்ன?. இதற்கு காரணமானவர்கள் 3 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகியதாக கூறும் வேளையில், எங்களுக்கு இதற்கான காரணத்தை கூறவேண்டும். யார் வருவது என்று தெரியாமல் சுட்டுவிட்டதாக வனத்துறை கூறியிருந்த நிலையில், இது என்ன பாகிஸ்தான் எல்லையா? இப்படி சுடுவதற்கு.
இங்குள்ள காவல்துறை அதிகாரிகளுக்கு கூட இக்காட்டிற்குள் எது எங்குள்ளது என்று கூறியவர், எங்கள் அப்பா தான். அந்தளவிற்கு இந்த காட்டிற்குள்ளேயே எப்போதும் போய் வருபவர் எங்க அப்பா. எங்களது அப்பாவை சுட்டுக் கொன்றதற்கான காரணத்தை எங்களுக்கு வனத்துறை கூறவேண்டும்.
தாக்க வந்ததாக வனத்துறை கூறும் நிலையில், அதற்கான காரணத்தையும் வனத்துறை கூறவேண்டும். இப்படி எதுமே செய்யாதவரை சுடுவதற்கு எந்த காரணமும் இல்லாமல், ஒரு உயிரைக் கொல்வதற்கு யாருக்குமே உரிமை இல்லை. எதோ சண்டை வந்ததாகவும், அதனால் ஆத்திரமடைந்து எங்க அப்பாவை சுட்டதாக சொல்லும் நீங்கள், நாளைக்கே எதிர் வீட்டுக்காரருடன் ஒரு சண்டை வந்தாலும் இப்படிதான் துப்பாக்கியை எடுத்து சுடுவீர்களா? எங்களுக்கு நீதி கிடைக்கும் வரை இங்கிருந்து போக மாட்டோம்" என்று அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தேனியில் தோட்ட வேலைக்குச் சென்றவரை சுட்டுக் கொன்ற வனத்துறையினர் - உறவினர்கள் சாலை மறியல்!